நெல்லையில் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதற்கும், அதை வாபஸ் பெறக் கோரி அமைதியான முறையில் போராடிய பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். அந்த தகவலை 3 பத்திரிகையாளர்கள் அளித்த நிலையில், அது செய்தியாக வெளியானதாகவும், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யாமல் பத்திரிகையாளர்கள் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ மையத்தின் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனுக்களைப் பெற்று எவ்வித விசாரணையுமின்றி, 3 பத்திரிகையாளர் மீது பணகுடி காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்ததை கண்டிப்பதாக வைகோ கூறியுள்ளார். பத்திரிகையாளர்களை குறிவைத்து வழக்குப் பதிவு செய்வது ஊடகத் துறையின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று கூறியுள்ள வைகோ, தங்கள் குமுறலை வெளிப்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியதை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பணகுடி காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் 3 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யவும், பொய் வழக்கு புனைந்த பணகுடி காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை வைகோ வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கும், வழக்கு தொடரப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.