25 ஆயிரம் பேர் கூடப் பேசாத இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுப்பது ஏன்?- வைகோ கண்டனம்

25 ஆயிரம் பேர் கூடப் பேசாத இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுப்பது ஏன்?- வைகோ கண்டனம்
25 ஆயிரம் பேர் கூடப் பேசாத இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுப்பது ஏன்?- வைகோ கண்டனம்
Published on

இறந்துபோன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருத செய்தித் தொகுப்பை தமிழின் பொதிகை தொலைக்காட்சியிலும், பிற மாநில மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. சமஸ்கிருத செய்தி வாசிப்பு முயற்சிக்கு திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வரும் பாஜக மோடி அரசு, அடுத்தகட்டமாக இறந்துபோன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் 25 ஆயிரம் பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கின்றது.

மோடி பிரதமரானது முதல் 'மன் கி பாத்' என்ற பெயரில் முழுக்க இந்தியில் உரை ஆற்றுகின்றார். கொரோனாவுக்குப் பின்பு அண்மைக்காலமாக அவர் கலந்துகொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலியிலும் நேரலையில் ஒலிபரப்பு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றார்கள்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, அனைத்து மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முழுமையாக இந்தியில் நேரலையில் ஒலிபரப்பினார்கள். டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்த விழாவில் பேசப்பட்ட உரைகள் முழுமையாக இந்தியில் நேரலையில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன.

தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயல்வதற்கு, மதிமுகவின் சார்பில் வன்மையான கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு, வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com