அதிமுகவினர் மழைநீரைப் போன்று தூய்மையானவர்கள் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா, வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
யானை ராஜேந்திரன் மனுவை நிராகரித்த நீதிபதி, பொன்.மாணிக்கவேலின் இணைப்பு மனுவை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். அப்போது, பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக் கடத்தல் சம்பவங்களில் அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன், பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலலையில், தங்களுக்கு எதிராக பொய் பரப்புரை செய்கின்றனர் என்றும் செய்தியால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுகவினர் மழைநீரைப் போன்று தூய்மையானவர்கள் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக மீது அவதூறு பரப்பப்படுவதாக அவர் கூறினார்.