அறந்தாங்கி அருகே நடைபெற்ற வடமாடு பந்தயத்தில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
அறந்தாங்கி அருகே சிலட்டூரில் வடமாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற வடமாடு பந்தயத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 13 காளைகள் கலந்து கொண்டன. இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கு ஆல்கஹால் செலுத்தப்பட்டுள்ளதா என சோதனை நடத்தினர். அதேபோல் காளைகளின் கொம்புகள் கூர்மையாக இருக்கும்பட்சத்தில் அதனை மட்டப்படுத்தி அனுமதிக்கப்பட்டன.
இதையடுத்து காளைகளை பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்றது. தீவிர பரிசோதனைக்குப் பின்பே மாடுபிடி வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடம் போட்டி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு காளையை பிடிப்பதற்கு 9 மாடுபிடி வீரர்கள் சீருடையுடன் அனுமதிக்கப்பட்டனர். மாடு பிடிபட்டு விட்டால் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.7 ஆயிரம் பரிசும் இதர சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாடு பிடிபடாமல் வெற்றி பெற்றால் அனைத்து பரிசுகளும் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பாக அனைத்து போட்டிகளிலும் விளையாடிய ஒரு வீரருக்கு சூழல் கோப்பை ஒன்றும் அதேபோல் சிறந்த மாட்டிற்கு கோப்பை ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான பாதுகாப்பு பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். போட்டியை அறந்தாங்கி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டதோடு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.