தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் சந்தன மரம் கடத்தல் இருந்து வந்த நிலையில், அரூர் அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரம் கடத்தி வைத்திருப்பதாக வனத் துறையினர், காவல் துறையினர் வருவாய்த் துறையினர் திடீரென கிராமத்திற்குள் நுழைந்து சோதனையின் போது கிராம மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில் கிராமத்தில் உள்ள வீடுகளையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கி, பெண்களை கொடுமையாக தாக்கினார்.
இதனைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் அனைவரையும் கொண்டு வந்து மிகுந்த சித்தரவதைக்கு உள்ளாக்கினர். இந்நிலையில் 90 பெண்கள், 15 ஆண்கள், 28 குழந்தைகள் உள்ளிட்ட 133 பேரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், வனத்துறை அலுவலகத்தில் வைத்து கொடுமையான முறையில் தாக்குதலும் நடத்தினார்.
இதையடுத்து வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்குப் பதிவு செய்ய போராடி 269 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 126 வனத் துறையினரும், 84 காவல் துறையினர், 5 வருவாய்த் துறையினர் என 269 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணை முடிந்து. கடந்த 2011 செப்டம்பர் 29ஆம் தேதி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் 269 பேரை குற்றவாளிகளாக உறுதி செய்தது. இதில் 54 பேர் உயிரிழந்த நிலையில் 215 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
அதில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த, 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்து பேருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சிலருக்கு இரண்டு ஆண்டு முதல் 7 ஆண்டு வரை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி வேல்முருகன் கடந்த மார்ச் 4ஆம் தேதி சம்பந்தப்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்ய வந்திருந்தார்.
இந்த ஆய்வு முடிந்த பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர ;நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டு மனு முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வரவேற்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இந்த மக்களுக்கு வழிகாட்டி, முன்னின்று நடத்திய மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாச்சாத்தி கிராமத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.
மேலும் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி கிராம மக்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும். மேலும் விடுபட்ட சிலருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நலத் திட்டங்களையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு மூலம் நீதிமன்றத்தின் மீது, அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.