கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்ட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக வந்த மக்கள், தடுப்பூசி இல்லாததால், அனைவரும் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த இரண்டு நாள்களில், 1.03 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் தரப்பட இருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த 63,370 கோவேக்சின் தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 40,000 கோவேக்சின் தடுப்பூசிகளும் வரவுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 33 சதவிகிதம் பேரும், 45 - 60 வயதினரில் 41.7 சதவிகிதம் பேரும், 18 -44 வயதினரில் 25.3 % பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் தகவலின்படி இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 33,64,476 லட்சத்துக்கும் மேலான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 23,59,39,165 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன. அவற்றில், முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் – 18,93,54,930. இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டவர்கள், 4.65 கோடி தடுப்பூசிகள் எனக்கூறப்பட்டுள்ளது.