தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறார்களா? முகக்கவசம் அணிகிறார்களா என்று கண்காணித்து நடவடிக்கை எடுத்து வரும் போக்குவரத்து காவல்துறையினருக்கான தடுப்பூசி முகாமில் கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.
இரு நபர்களுக்கு இடையே குறைந்த பட்சம் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்பதுதான் தனிமனித இடைவெளி.அப்படி ஒரு இடைவெளியை இங்கு எந்த இடத்திலாவது பார்க்க முடிகிறதா? பலரும் முகக்கவசத்தை ஒப்புக்காக தாடையில் அணிந்திருந்ததையும் காண முடிகிறது. சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் ஆயுதப்படைகாவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சென்னை காவல்துறை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட முகாமில்தான் இந்த காட்சிகள்.
தடுப்பூசி போடவந்த காவல்துறையினரிடையே எந்த வித தனிமனித இடைவெளியும் இல்லாமல் கூட்டமாக இருந்ததை கண்டு கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி கண்டித்ததையடுத்து கூட்டம், வரிசைப் படுத்தப்பட்டது. பிற அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதிகள் இருந்தாலும் இங்கு காவலர்களுக்கென பிரத்யேகமாக தடுப்பூசி செலுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதால் பெரும்பாலான காவலர்கள் இங்கே தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்த ஒரு இடத்தில் காவல் துறையினருக்கென பிரத்யேகமாக தடுப்பூசி செலுத்த அமைக்கப்பட்டுள்ளதால் தான் இந்த நெருக்கடி சூழல் உருவாகியுள்ளதாகவும், உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி காவலர்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ள மையங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் சில காவலர்கள் கருத்து தெரிவித்தனர்.