சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு சுகாதாரத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில், நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான மின்கல வாகனத்தின் பயன்பாட்டை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''1.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகள் வந்தவுடன் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு சுகாதாரத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.