செய்தியாளர்: பிரவீண்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய ராகவன். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் V3 online TV என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் கிளைகளை கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி முதலீடு பெற்ற நிலையில், திடீரென அந்த நிறுவனத்தை மூடியுள்ளார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் இவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சக்தி ஆனந்தன் அதில் இருந்து வெளியே வந்து MY V3 Ads என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்திற்கான பணிகளை விஜயராகவன் செய்து கொடுத்து வந்துள்ளார். மேலும் விஜய ராகவனிடம் இருந்து மூலிகை பொருட்கள், சித்த மருத்துவ மாத்திரைகளையும் MY V3 Ads நிறுவனத்திற்கு வாங்கி வந்துள்ளனர். இதனிடையே கடந்த மாதம் MY V3 Ads நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்வதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன் எனவும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து விஜயராகவனை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சித்த மருத்துவம், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை தயாரிப்பது தொடர்பான அவரிடம் போலீசார் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பாக முனைவர் பட்டம் படித்திருப்பதாகக் கூறி சான்றிதழ்களைக் கொடுத்திருந்தார். அவற்றை போலீசார் ஆய்வு செய்த போது அவை போலியான சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுரையில் இன்று அதிகாலை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், விஜயராகவனின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், அவரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மதுரையில் இருந்து கோவை அழைத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் MY V3 Ads நிறுவனத்திற்கு மருந்து மற்றும் மூலிகை பொருட்களை விஜயராகவன் அனுப்பி வருவதும், ஆனால் முறையான படிப்பு எதுவும் படிக்காமல், அண்ணாமலை பல்கலையில் இயற்கை மருத்துவத்தில் முனைவர் பட்டம் முடித்து இருப்பதாக போலீசாரிடம் தவறான தகவலை தெரிவித்து இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மோசடி உட்பட 4 பிரிவுகளில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விஜயராகவன் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருஜி என்று V3 online TV மற்றும் MY V3 Ads நிறுவன வாடிக்கையாளர்களால் அழைக்கப்படும் விஜயராகவன் தற்போது போலீசார் பிடியில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.