நெல்லை மாவட்டத்தில் 3 லட்சம் வாங்கிய கடனுக்கு 15 லட்சம் மதிப்புள்ள வீட்டை கந்துவட்டிக்காரர்கள் அபகரிப்பதாக பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் ஞானதீபம், இவர் தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த நிலையில் கணவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் இவரது கணவர் கந்துவட்டிக்கு 3 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். அதனை கட்ட முடியாத சூழலில், தற்போது கணவரை பிரிந்து வாழும் தன்னிடம் கடன் கொடுத்தவர்கள் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிப்பதாக ஞானதீபம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மனுவில் கைக்குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் கந்துவட்டிகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் வீட்டை மீட்டு தரும்படி ஞானதீபம் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கந்துவட்டி தொல்லை காரணமாக ஆட்சியர் அலுவலகத்திலேயே தனது இரண்டு குழந்தைகளுடன் தம்பதிகள் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.