நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய ஓய்வுபெற்ற இணை இயக்குனர் மருத்துவர் நக்கீரன், சென்னை மருத்துவ கல்லூரி பொது அறுவை சிகிச்சை நிறுவன ஓய்வு பெற்ற இயக்குனர் மருத்துவர் பாண்டியராஜ், முகமது அன்சு ஆகியோர் தொடர்ந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மருத்துவர் நக்கீரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் வழங்கிய அவகாசம், ஜனவரி 27ம் தேதியுடன் முடிவடைவதாகவும், ஏற்கனவே நீதித்துறை நடவடிக்கைகளை மார்ச் வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாலும், மாநில நிலவரங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாலும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்றாவது அலை தீவிரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தலை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்தும்படியும், அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டுகளை பின்பற்றும்படியும் உத்தரவிடலாம் எனவும் தெரிவித்தனர்.
மருத்துவர் என்ற முறையில் கட்டுபாடுகளை பிரச்சாரங்களில் எவ்வாறு பின்பற்ற வேண்டுமென தவிர தள்ளிவைக்க கோரக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பரிசோதனைகள் குறைந்ததற்கு இருமல் சளிக்கான மருத்துவத்தை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் ஒரு காரணம் என தெரிவித்தனர்.
5 மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாநில உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோருவது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். தங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றம் தான் அணுக வேண்டும் எனவும் மனுதாரரின் கோரிக்கை நியாயமாக இருப்பதால், தேர்தலை கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.
வழக்கில் வாதங்கள் முடிவடையாததால், விசாரணையை நீதிபதிகள், நாளைக்கு (ஜனவரி 25) தள்ளிவைத்தனர்.