தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, வேளாண் இளநிலை படிப்பில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு, முதல்முறையாக ஆன்லைன் மூலமாக இன்று தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்புக் கல்லூரிகள் மூலம் 12 இளங்கலை படிப்புகள் உள்ளது. மொத்தமுள்ள 3,422 இடங்களுக்கு 48,682 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 7 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைன் மூலமாக இன்று முதல் துவங்கி உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் www.tnau.ac.in என்ற இணையளத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தில் உள்ளதாக கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் முதல்வர் மகிமை ராஜா தெரிவித்து உள்ளார். இந்த கலந்தாய்வு வருகிற 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து 16 ஆம் தேதி தொழில் கல்விக்கான கலந்தாய்வும், 17 ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. மேலும் வருகிற 23 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி கல்லூரிகள் தொடங்க உள்ளது.