இந்தியா கூட்டணி என்ற பெயர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்த போது கூட திமுகவை பெயர் சொல்லி சுட்டி காட்டி ஊழல் கட்சிகள் எல்லாம் கூட்டணி வைத்திருக்கின்றனர் என விமர்சித்திருந்தார்
மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சி தான் ஊழலை கண்டுபிடித்தவர்கள் என்று சாடியதுடன் நீங்கள் மணிப்பூர் பற்றி பேசும் முன்பு தமிழ்நாட்டைப் பற்றி பேசுங்கள், பாஜக பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் உள்ள திமுக பற்றி பேசுங்கள், ஊழல் பற்றி பேசும் பொழுது உங்களுடனே இருக்கக்கூடிய திமுகவை பாருங்கள், நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை கொண்டு வந்தவர்கள் என்றால் தமிழ்நாட்டிற்கு ஊழலை கொண்டு வந்தவர்கள் திமுக என நேரடியான விமர்சனத்தை முன் வைத்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் உடனடியாக எதிர்வினை ஆற்றப்பட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, தன்னை கைது செய்து விடுவேன் என ஸ்மிருதி இராணி மிரட்டுவதாகவும் அப்படி என்றால் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
அதேபோல, மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசும் போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை அமலாக்கத் துறையினர் வருமானவரித்துறையினர் ஆகியோரைக் கொண்டு அரசு மிரட்டுவதாகவும் ஆளும் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் எனவும் காட்டமாக பேசினார்
இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் பார்த்து, “எங்களை எதிர்த்தால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்” என்ற வகையில் பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது.
தி.மு.க இத்தகைய மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம் அல்ல. மக்களவையில் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும், மாநிலங்களவையில் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா அவர்களும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கிறார்கள். கழகத் துணைப் பொதுச்செயலாளர் தங்கை கனிமொழி அவர்கள் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி, பா.ஜ.க.வின் செங்கோல் லட்சணத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார். தயாநிதி மாறன் அவர்கள் டெல்லி சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி” என தெரிவித்துள்ளார். இத பின்னணியை நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகளுடன் அலசுகிறது செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளி தொகுப்பு.