சென்னையில் இன்று (07-01-2024) மற்றும் நாளை உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை இன்று காலை 10 மணி அளவில் துவங்கி வைத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” என்ற ஆய்வறிக்கையை வெளியிடவுள்ளார்.
மேலும் 2030 ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே இம்மாநாட்டின் முக்கிய இலக்கு. இப்படியான முக்கிய இலக்குகளை கொண்ட இம்மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களும் பங்கேற்று உரை நிகழ்த்தின. அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலும் உரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில், “கலாசாரம், இயற்கை எழிலில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு முதலீடு செய்ய நீங்கள் அனைவரும் வந்திருக்கிறீர்கள். டி.ஆர்.பாலுவின் மகன் தற்போது தமிழக தொழில்துறை அமைச்சராக இருக்கிறார். ஒரு பெருமைமிகு தந்தையாக TR பாலு இங்கே அமர்ந்திருக்கிறார். டாக்டர் TRB ராஜா, என்னை அண்ணா என்றே அழைப்பார்.
மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடுவார். ஒருங்கிணைந்த வளர்ச்சியே பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். அந்தவகையில் ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை எட்டினால் ஏராளமான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாகும் என்ற நோக்கோடு ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை வைத்து செயல்படும் முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
மேலும் இந்தியாவில் தமிழகத்தின் பங்கையும் கலச்சாரத்தினையும் பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளார் நரேந்திர மோடி. ஆகவே பிரதமரின் இதயத்தில் தமிழகத்திற்கு முக்கிய இடம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்கலை நாம் எதிர்கொண்டோம்.
எனவே பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி அவசியமாகிறது. இளைஞர்கள் உட்பட அனைவரும் தொழில்தொடங்குவதற்காக விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
2047ல் வளர்ந்த நாடாக இந்தியா மாற பிரதமர் 5 திட்டங்களை முன்வைத்துள்ளார். இதில் அனைத்து மாநிலங்களும் வளரவேண்டும் என்று பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார். ஆகவே ’காலனி ஆதிக்க மனநிலை மாறவேண்டும்; பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒற்றுமையே இலக்காக இருக்க வேண்டும்’ - இதன் அடிப்படையில் 140 கோடி மக்களுக்கும் இணைந்து செயல்பட வேண்டும்.
இத்தருணத்தில், வெற்றிகரமாக சூரியனை நோக்கிய ஆதித்யா எல்1 விண்கலத்தின் திட்ட இயக்குநரான நிஹர் ஷாஜிக்கு எழுந்துநின்று நமது பாராட்டுகளை தெரிவிப்போம்” என்று பேசினார்.