தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒன்றிய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள 20 மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வரும் சூழலில், ஒட்டுமொத்தமாக 1,228 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தப் பள்ளிகளில் அந்தந்த மாநில மொழிகள் பயிற்று மொழிகளாகவோ, பாடல்களாகவோ இல்லை. அதனால் இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத பிற மொழி பேசும் மாணவர்களை ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது உறுதியாகிறது. சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது. ஆகவே தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலு தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ, அந்த மாநில மொழியை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.