சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.33.57 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 5,594 புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் 85 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தெரு விளக்குகள் விடுபட்ட பகுதிகள், காவல்துறை சார்பாக பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில் புதிய தெருவிளக்கு மின்கம்பங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மண்டலங்களான திருவொற்றியூர் மணலி அம்பத்தூர் மாதவரம் வளசரவாக்கம் சோளிங்கநல்லூர் ஆகிய இடங்களில் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் 1,104 மின் சேமிப்பு எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெருநகர காவல் துறையின் சார்பில் மாநகர பாதுகாப்பு கருதி விளக்குகள் அமைக்க அறிவுறுத்தப்பட்ட இடங்களில் 696 எல்இடி தெரு விளக்குகளும் 49 உயர் கோபுர எல்இடி மின்விளக்குகள் ரூ.6.01கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி மின்துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ரூ.22.73 கோடி மதிப்பில் 3,793 மின்சேமிப்பு எல்இடி-ன் விளக்குகள், 36 உயர்கோபுற எல்இடி விளக்குகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மாநகர பகுதிகளில் மிகவும் துறுப்பிடித்த மற்றும் உயரம் குறைவான மின்கம்பங்களை மாற்றி 1,997 மின்கம்பங்கள் புதிதாக மாற்றியமைக்கப்பட உள்ளன. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மிகவும் துரிதமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.