ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சாலையோரத்தில் இறைச்சி கடைகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலும் இங்கு உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபடுகின்றனர். இந்த நிலையில் நகரில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் நகராட்சி அனுமதியின்றி சிலர் இறைச்சி மற்றும் மீன் கடைகள் நடத்தி வருவதாக தெரிகிறது.
குறிப்பாக திருத்தணி-அரக்கோணம் திருத்தணி-சித்தூர் திருத்தணி-சென்னை மற்றும் புறவழி சாலை ஓரங்களில் 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள், 50க்கும் கடைகள் மேற்பட்ட இறைச்சி கடைகள் இயங்குகின்றன. இதையடுத்து அனுமதியற்ற கடைகளால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி சாலையோர இறைச்சி கடைகளை அகற்ற வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் திருத்தணி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜலட்சுமி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சித்தூர் சாலையில் ஆக்கிரமித்து வைத்திருந்த மீன் கடைகளை அகற்றினார்.
மேலும் இதுகுறித்து பேசிய நகராட்சி ஆணையர், “நகராட்சியில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஓரம் இறைச்சி கடைகள் வைப்பது சட்டப்படி குற்றம். முதற்கட்டமாக சாலையோர இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி இம்மாத இறுதிக்குள் கடைகளை அகற்ற கால அவகாசம் கொடுத்து உள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சாலையோரத்தில் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறும் கடைக்காரர்கள் மீது நகராட்சி விதிகள்படி அபராதம் விதிப்பதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். நகராட்சியை சுகாதாரமாக வைத்துக்கொள்ள பொதுமக்கள், கடை வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.