சாதி மறுப்பு திருமணம் செய்த உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர் (22) கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினார். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.
இந்த ஆணவக்கொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை, தாய்மாமா, அவரது உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.