"பெரியார் மண்ணில் நின்றுகொண்டு, `ஆம்பளையா’ என பேசுகிறீர்கள்..."- இபிஎஸ்-ஐ சாடிய உதயநிதி!

"பெரியார் மண்ணில் நின்றுகொண்டு, `ஆம்பளையா’ என பேசுகிறீர்கள்..."- இபிஎஸ்-ஐ சாடிய உதயநிதி!
"பெரியார் மண்ணில் நின்றுகொண்டு, `ஆம்பளையா’ என பேசுகிறீர்கள்..."- இபிஎஸ்-ஐ சாடிய உதயநிதி!
Published on

“மோடி, அமித்ஷா தான் உங்களுக்கு எஜமானர்கள். அவர்களுக்கு மட்டுமே உண்மையானவராக இருக்கின்றீர்கள்... மக்களுக்கு இல்லை” என ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதல்வர் பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்காளர்கள் வாக்களிக்க, அமைச்சர் உதயநிதி நேற்று பிரசாரம் செய்தார். ஈரோடு கிழக்கில் கணபதிபுரம், ராஜாஜிபுரம், 50 பம்பிங் ஸ்டேஷன் ரோடு கார்னர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் அவர்.

அப்போது கணபதி நகர், காவேரி ரோடு கார்னர் பகுதிகளில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், “திமுக-வின் இளைஞர் அணி செயலாளராக கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டேன். தற்பொழுது அமைச்சராகி முதன்முறை உங்களை தேடி வந்துள்ளேன். ஏற்கனவே ஈவெரா திருமகனை 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். தற்பொழுது அவரது தந்தை இளங்கோவனை, ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். மகன் விட்டு சென்ற பணியை, தந்தை தொடர உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். கலைஞரின் பேரன்... பெரியாரின் பேரன்... அவருக்கு (ஈவிகேஎஸ் இளங்கோவன்) வாக்கு கேட்க வந்துள்ளேன்.

அதிமுக வேட்பாளரை, வாக்காளர்கள் விரட்டி விரட்டி அடிக்கின்றனர் என்பதை தொலைக்காட்சியில் காண முடிகிறது. அதிமுக தலைவர் பழனிசாமி, `நீங்க மீசை வச்ச ஆம்பளையா?’ என்று பேசியுள்ளார். 2016 ல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தலைமை செயலகத்தில் ரெய்டு நடந்த பொழுது உங்களின் மீசை எங்கிருந்தது? (இடையே சசிகலாவின் கால்களில் இபிஎஸ் விழுந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காண்பித்து இபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்து பேசினார் உதயநிதி)

பெரியார் மண்ணில் நின்றுகொண்டு, `ஆம்பளையா’ என நீங்கள் பேசுகிறீர்கள். முதல்வராக இருந்த பொழுது, மக்கள் பிரச்னைகள் தொடர்பாக நீங்கள் பேசவே இல்லை.

ஆட்சியில் இருக்கும்பொழுது, `நான் முதல்வர் - நீங்கள் துணை முதல்வர்; நீங்கள் ஒருங்கிணைப்பாளர் - நான் துணை ஒருங்கிணைப்பாளர்’ என இருந்தீர்கள். ஆனால் ஆட்சி முடிந்த அடுத்த நிமிடம், மாறி மாறி நீங்களும் பன்னீர்செல்வமும் சண்டை போட்டுக் கொண்டீர்கள். நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. குறுக்கு வழியில் முதல்வராக வந்தீர்கள். டெல்லியிலுள்ள மோடியும் அமித்ஷாவும் தான் உங்களுக்கு எஜமானர்கள். அவர்களுக்கு மட்டுமே உண்மையானவராக இருக்கிறீர்கள்.

இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செய்துள்ளார். திமுக, இளைஞரணி பாசறை என உருவாக்கி இளைஞர்களுக்கு பயிற்சியை கொடுத்துள்ளது. ஆனால் பாஜக, கவர்னர்களுக்கான பயிற்சியை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு பாஜக, கவர்னர்களின் டிரைனிங் சென்டராக செயல்படுகிறது. தமிழிசை, இல கணேசன், சி பி ராதாகிருஷ்ணன் வரிசையில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் ஒரு மாநிலத்திற்கு கவர்னர் ஆவார். இன்னும் சொல்லப்போனால், விரைவில் பழனிசாமி கூட பாஜக தலைவர் ஆவார். அந்த அளவில் தான் அதிமுக கட்சி நடத்தபடுகிறது” என நகைப்புடன் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com