தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். “அரசியல் என்பது புனிதமான பணி; தொழில் அல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை” என அறிவித்து இருக்கிறார் அவர்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு கட்சியின் கொள்கை, கொடி, சின்னம் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை விஜய்யே அறிவிப்பார் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கும் உரிமை இருக்கின்றது. நடிகர் விஜய் இப்போது இந்த முடிவெடுத்துள்ளார். அவருக்கு அனைவரது சார்பாகவும் வாழ்த்துகள். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.