துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக பணியாற்றுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கோரிக்கை வலுத்திருக்கிறது, பழுக்கவில்லை... மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. இதுதான் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுப்பது தொடர்பாக அமெரிக்க பயணத்திற்கு முன்பும், பின்பும் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்கள்.
முதலமைச்சர் கூறியது போன்றே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராகி உள்ளார். மேலும், முதலமைச்சரின் வசம் இருந்த திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறை, உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் துதி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன். எனக்கு வாழ்த்து கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்.
இரண்டு வருடங்களாக அமைச்சராக பொறுப்பு வகித்து என் பணிகளை சிறப்பாக செய்துகொண்டுள்ளேன். இது கூடுதல் பணிதான். ஆனால், தலைவர், அமைச்சர்களின் ஒத்துழைப்போடு இதையும் சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது. விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக்கொண்டு அதன்படி சிறப்பாக அமைத்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்” என தெரிவித்தார்.