“இந்தி திணிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டால் அடுத்து டெல்லி தலைநகரில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
மத்திய அரசு இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இந்தி பயிற்று மொழியாக இருந்தால் மட்டுமே ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்ளிட்டவைகளில் தேர்வு எழுத முடியும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், இந்தியா முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்தும் திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இளைஞர் அணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிற சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் எப்போதும் இந்தி திணிப்புக்கு எதிராக நாங்கள் போராடுவோம்” என்றார்.
தொடர்ந்து அவர், “தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை என மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஆர்ப்பாட்டம் தான் நடக்கிறது. இந்தி திணிப்பை என்றும் எதிப்போம். எப்போதும் விட மாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நாங்கள் இருக்கிறோம். ஆளும் கட்சி என்பதால் மட்டும் எதிர்க்கவில்லை. இந்தியை எப்போதும் எதிர்ப்போம். இங்கு மீண்டுமொரு மொழிப் போரை ஏற்படுத்த வேண்டாம். எந்த போராட்டமாக இருந்தாலும் திமுக வெற்றி பெறும். தொடர்ந்து திணிப்பு ஏற்படுத்தினால் டெல்லியில் போராட்டம் நடத்தவும் திட்டமிடுவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட பா.ஜ.க நுழையவிடாமல் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். 2019ம் ஆண்டு போல் தான் தமிழகத்தில் பா.ஜ.க வுக்கு ஏற்படும்'' என்றார்.
இதையும் படிக்க: ‘தொன்மையான தமிழ் மொழி இருக்க நாம் எதற்காக இந்தி படிக்க வேண்டும்’ - சீமான் கேள்வி