திருப்புத்தூர் அருகே இரு கிராமங்கள் இடையே வரி வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் அரசுப் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் கோயிலில் வைத்து படிக்க வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட நார்சம்பட்டி கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 230 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இதுநாள் வரை கும்மிடிகான்பட்டி கிராம பஞ்சாயத்திற்கு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தொழில் வரி செலுத்தி வந்ததாகவும், தற்போது இந்த பள்ளி நார்சம்பட்டி பஞ்சாயத்துக்குச் சொந்தமான இடத்தில் உள்ளதால் நார்சம்பட்டி கிராம பஞ்சாயத்திற்கு தொழில் வரி செலுத்தக் கோரி அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது
இதுநாள் வரை தங்கள் பஞ்சாயத்திற்கு செலுத்தப்பட்டு வந்த வரிப்பணம் தற்போது நார்சம்பட்டி பஞ்சாயத்திற்கு செலுத்த போவதை அறிந்த கும்மிடிக்கான்பட்டி கிராம மக்கள் அந்த பள்ளியில் பயிலும் தங்களுடைய பிள்ளைகளை அனுப்பாமல் தங்கள் பகுதியில் உள்ள கோயிலில் வைத்து படிக்க வைத்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர், மாணவர்களை பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கக் கூடாது என எச்சரித்து உடனடியாக பள்ளிக்கு அனுப்பக் கோரி பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.