நாமக்கல்லில் காரில் லிப்ட் கேட்பது போல் நடித்து தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ரகுமான். இவர் பணி நிமித்தமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சென்று விட்டு, நேற்று இரவு நாமக்கல் வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். அவர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே வந்த போது திருநங்கைகள் 2 பேர் காரை மறித்து லிப்ட் கேட்பது போன்று பேசி உள்ளனர். சிறிது நேரத்தில் காரில் இருந்த ரகுமானிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள், பணம் மற்றும் நகைகளை பறிக்க முயற்சித்து உள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த ரகுமான் சம்பவம் குறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த போது வழிப்பறியில் ஈடுபட்டது நாமக்கல் கொழந்தான் தெருவை சேர்ந்த திருநங்கை அர்ச்சனா மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த திருநங்கை ரேகா எனபதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மிரட்டல் விடுத்தல், வழிப்பறியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் பலர் நின்று கொண்டு இதுபோன்று வழிபறி செயல்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்க முன்வராததால் திருநங்கைகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். நேற்று இரவு முதன் முதலாக ஒருவர் புகார் அளித்த நிலையில் 2 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.