செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீழ அனுபவப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ். இவரது வீட்டின் கொல்லை புறத்தில் அடுக்கி வைத்திருந்த பழைய ஓடுகளை எடுக்க முயன்றுள்ளார். அப்போது அதில் பாம்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பாம்புபிடி வீரர் பாண்டியனை அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பாண்டியன் ஓடுகளை அப்புறப்படுத்தி உள்ளே பதுங்கி இருந்த பாம்பை பிடிக்க முயன்றுள்ளார்.
முதலில் 6 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஆண் பாம்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தண்ணீரை ஊற்றி ஒருமணி நேரம் போராடினார் பாண்டியன். இதைத் தொடர்ந்து வெளியே வந்த பாம்பு ஆக்ரோஷத்துடன் பாம்புபிடி வீரரை தாக்க விரட்டிய காட்சி காண்போரை சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து 7 அடி நீளமுள்ள அந்த பாம்பையும் பிடித்து பாட்டிலில் அடைத்து பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவித்தனர்.