கடலூர் அருகே ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தியேட்டர்கள், மால்கள், பெரிய அளவிலான கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. முக்கியமாக மதுப்பிரியர்கள் அதிகம் கூடும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வார்னிஷ், சேவிங் லோஷன் போன்றவற்றை போதைக்காக உட்கொண்டு சிலர் உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில், கடலூர் சிப்காட்டில் உள்ள ரசாயன நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த குமரேசன் என்பவர் ஒரு லிட்டர் மெத்தனாலை கொண்டு சென்று அவரது நண்பர்களான சந்திரகாசி, எழில்வாணன், மாயக் கிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து குடித்துள்ளார். இதில் நேற்று கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சந்திரகாசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதன்பிறகு எழில்வாணன், சுந்தர் ராஜ், மாயக் கிருஷ்ணன் ஆகிய மூவரும் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார்கள். சுந்தர்ராஜ் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குமரேசன் நல்ல நிலையில் இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் அந்த நிறுவனத்திற்கு சென்று மெத்தனாலை அஜாக்கிரதையாக கையாண்டதாக கூறி நேற்று இரவே சீல் வைத்துவிட்டனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த சுந்தர்ராஜ், மாயக் கிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.