பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்றவிடாமல் தடுத்த விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் தாக்கப்பட்ட புகாரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளுவர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக அமிர்தம் என்ற பெண் உள்ளார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெயர் இடம்பெறக்கூடாது என்பதற்காக பெயர்ப்பலகையில் வண்ணம் மட்டுமே பூசப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தன்று முறைப்படி கொடியேற்ற அழைப்புவிடுக்கப்பட்டு பின்னர் நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என அவருக்கு தகவல் சென்றது. முன்னதாக குடியரசுத் தினத்தன்று சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக அமிர்தம் கூறுகிறார்.
இது தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற புதிய தலைமுறை செய்தியாளர் எழில் செய்தி சேகரிக்கச் சென்றார். ஊராட்சி மன்ற அலுவலகத்தின் காட்சிகளை பதிவு செய்தபோது அங்கிருந்த ஊராட்சி மன்றச் செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஜயகுமார் உள்பட 5 பேர் சூழ்ந்து செய்தியாளர் எழிலை தடுத்து தாக்குதல் நடத்தினர். கண்ணில் காயத்துடன் போராடிய செய்தியாளரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் தள்ளினர். அவர் படம்பிடித்த செல்போனையும் பறித்து ஊராட்சி அலுவலகத்தில் சிறைப்பிடித்து வைத்தனர்.
இந்த தகவல் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உத்தரவின்பேரில் அங்குவிரைந்த வருவாய் கோட்டாட்சியர் வித்யா தலைமையில் அரசு அதிகாரிகள், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு செய்தியாளரை மீட்டனர். அப்போது நடந்த விவரங்களை அவர் கோட்டாட்சியரிடம் விளக்கினார். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றச் செயலாளர் சசிகுமார், ஊராட்சிமன்ற துணை தலைவரின் கணவர் விஜயகுமாரை காவல்துறையினர் விசாரணைக்காக பிடித்துச்சென்றனர்.
இந்நிலையில், செய்தியாளர் எழில் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஊராட்சிமன்றத் தலைவர் சசிகுமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் கணவர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.