பண மதிப்பிழப்பை அறியாமல் ரூ.46 ஆயிரத்தை இழந்த மூதாட்டிகள் - நேரில் அழைத்து ஆட்சியர் உதவி

பண மதிப்பிழப்பை அறியாமல் ரூ.46 ஆயிரத்தை இழந்த மூதாட்டிகள் - நேரில் அழைத்து ஆட்சியர் உதவி
பண மதிப்பிழப்பை அறியாமல் ரூ.46 ஆயிரத்தை இழந்த மூதாட்டிகள் - நேரில் அழைத்து ஆட்சியர் உதவி
Published on

திருப்பூரில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கினார். 

திருப்பூர் மாவட்டம் பூமலூர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள் தங்கம்மாள், ரங்கம்மாள். 75 வயதை கடந்த இவர்கள் இருவருமே சகோதரிகள். இவர்களின் கணவர்கள் இறந்துவிட்டதால், மகன்களின் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இருவருக்கும் உடல்நிலை குறைபாடு ஏற்பட, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மருத்துவ செலவுக்கு அதிகம் செலவாகும் என மருத்துவர்கள் கூற, இருவரும் தாங்கள் யாருக்கும் தெரியாமல் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொடுத்தனர்.

இருவரும் சேர்த்து வைத்திருந்த மொத்த பணம் ரூ.46 ஆயிரம் ஆகும். ஆனால் அனைத்தும் அரசால் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள். அதைக்கண்டதும் அவர்களின் மகன்கள் அதிர்ச்சியடைந்து, இவையெல்லாம் செல்லாது என்ற விவரத்தை கூறினர். இதனால் தங்கம்மாள் மற்றும் ரங்கம்மாள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். தங்களுக்கு நோட்டுகள் செல்லாமல் போன விவரம் தெரியாது என்றும் இருவரும் அப்பாவித்தனமாக பதிலளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மூதாட்டிகள் இருவருக்கும் முதியோர் உதவி தொகை கிடைப்பதற்கான அரசாணையை வழங்கினார். அதுமட்டுமின்றி அவர்களின் மருத்துவ செலவுக்கு உதவிகள் செய்யபடும் என புதிய தலைமுறைக்கு விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மூதாட்டிகள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com