கடந்த சில நாட்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சாராயம் அருந்திய பலர் உடல் நலம் பாதிக்கப்பட்ட சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களை பரிசோதனை செய்ததில், அவர்கள் அருந்திய சாராயத்தில் அளவுக்கு அதிகமான மெத்தனால் கலக்கப்பட்டதால் விஷ சாராயத்தை இவர்கள் அருந்தியது உறுதியானது. இதன்பின்னர் 100க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தவகையில், தற்போதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இதற்கு காரணமான விஷசாரயத்தை விற்பனை செய்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான மெத்தனாலை சப்ளை செய்த மாதேஷ் என்பவரிடம் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், மாதேஷின் நெருங்கிய நண்பர்களான சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பேரில் பண்ருட்டியை சேர்ந்த ஹோட்டல் மற்றும் பேக்கரி முதலாளியான சக்திவேல், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மீன் வியாபாரி கண்ணன் இவர்கள் இருவரையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களிடம் நேற்று விசாரணை நடத்தியதில், முக்கிய தகவல்கள் பல கிடைத்துள்ளன.
அதில் தெரியவந்தவை - கடந்த சில நாட்களுக்கு முன்பாக சக்திவேலுக்கும் மாதேஷுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சத்திவேலின் பெயரில் இருக்கும் ஜிஎஸ்டி பில்லை பயன்படுத்தி அதில் போலியான பில்லை உருவாக்கி மெத்தனாலை சென்னையிலிருந்து வாங்கியுள்ளார் மாதேஷ்.
மேலும், மாதவரத்திலிருந்து வாங்கிய மெத்தனாலை விருதாச்சலத்தில் விற்பனை செய்துள்ளார். இதில் கண்னனின் உறவினர் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். ஏனெனில், கண்ணன் மீன் பிடிக்கும் பரிசல்களில்தான் இந்த மெத்தனால் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.