செய்தியாளர்: நைனா முகம்மது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிறாவயலில் பொங்கலை பண்டிகையை கொண்டாடும் வகையில் உலகப் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தொடங்கி வைத்த இந்த மஞ்சுவிரட்டு போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 272 காளைகளும் 81 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில், வாடிவாசலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான கட்டு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், கட்டு மாடு முட்டியதில் திருப்பத்தூர் அருகே வளையபட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ராகுல் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுமார் 75 பேர் காயம் அடைந்த நிலையில் அதில் 12 பேர் படுகாயம் அடைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.