சபரிமலையில் 2 மணிநேரமாக கொட்டித் தீர்த்த கனமழை.. இருமுடியோடு நனைந்தபடி பக்தி பரவசத்தில் பக்தர்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு மணி நேரமாக கனமழை பெய்த நிலையில், அதனை கண்டுகொள்ளாது, இருமுடியோடு பக்தர்கள் நனைந்தவாறே பக்தி பரவசத்தில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை
சபரிமலைபுதியதலைமுறை
Published on

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அந்த வாரத்தின் இறுதி நாளில் சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடை திறக்கப்பட்டதற்குப் பிறகு இரண்டாவது முறையாக இன்று மாலை மீண்டும் இரண்டு மணி நேரத்திற்கு கனமழை கொட்டித் தீர்த்தது.

சபரிமலை சன்னிதானத்தின் நுழைவுவாயில் பெரிய படிக்கட்டுகளில், மழைநீர் வழிந்தோடியது. ஆனாலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஐயப்ப பக்தர்கள் நனைந்தவாறே இருமுடி கட்டோடு சென்று 18ஆம் படியேறி சாமி தரிசனம் செய்தனர். இரண்டு மணிநேர கனமழை சபரிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளை முழுமையாகக் குளிர்வித்தது.

டிசம்பர் மாத பனிக்காற்றோடு கலந்த குளிர் காலநிலை நிலவியது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு ஆறு கிலோமீட்டர் வேர்க்க விறுவிறுக்க நடைப்பயணம், தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருடன் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் புழுக்கம் போன்றவை கனமழை தந்த குளிர்ச்சியில் விலகின. இதனால் மழையை வரவேற்ற ஐயப்ப பக்தர்கள் மன மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சுபமாய் சாமி தரிசனம் செய்து பக்தி பரவசமடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com