செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்குச் சொந்தமான வீட்டில் முத்து என்பவர் குடியிருந்து வந்துள்ளார். மேலும் முத்துவின் நண்பர்கள் சிலரும் தங்கி, அம்பத்தூரில் வெல்டிங் வேலை செய்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முத்து மற்றும் அவரது நண்பர், கஞ்சா போதையில் செல்போனில் தகாத வார்த்தைகளில் சத்தமாக பேசியுள்ளனர். அதைக்கண்ட அங்கிருந்த சந்திரலேகா (38) என்ற பெண், “தகாத வார்த்தைகளை பேசக் கூடாது. அருகில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர்” என கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்து அவரது நண்பர்கள் இருவர் தங்களது அறையில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து வந்து சந்திரலேகாவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சந்திரலேகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரின் மகள் சீதாலட்சுமி (38), அவரது மகன் காமேஷ் (17) ஆகியோரையும் வீடு புகுந்து சரமாரியாக தாக்கியதோடு, அடுத்தடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தப்பியோடி ஏரி பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரை அரைமணி நேரத்தில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பொதுமக்களை தாக்கியது திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அபினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தாம்பரம், செங்கல்பட்டு, மண்ணிவாக்கம், திருப்போரூர் ஆகிய காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள். மேலும் விஷ்ணு ஏ பிரிவு ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்துள்ளார். அபினேஷூம் விஷ்ணுவும் இருவரும் சமீபத்தில்தான் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. இந்நிலையில் தப்பியோடிய முத்து என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், பொதுமக்களை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.