டாஸ்மாக் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கண்டித்து, மதுபாட்டில்களை மாலையாக அணிந்தும், கையில் மண்சட்டி ஏந்தியும் விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் மதுபானக் கடைகளை தடைசெய்ய வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தடைசெய்யக்கோரியும் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று விவசாயிகள் இரண்டு பேர் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தியும், கையில் மண்சட்டி ஏந்தியும் கழுத்தில் காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்தும் ஊர்வலமாக வந்த விவசாயிகள், மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால், விவசாயிகள் திருவோடு ஏந்தும் நிலை விரைவில் ஏற்படும் என்பதை உணர்த்தவே, கையில் மண்சட்டி ஏந்தி வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.