மேலூர் அருகே குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டியைச் சேர்ந்த ராகவானந்தம் மற்றும் ரஞ்சிதா தம்பதிகளின் குழந்தைகள் பார்கவி மற்றும் யுவராஜ். இரு குழந்தைகளும் கடந்த 2016 ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே கிடந்த எலி மருந்து கலந்த கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர். இதனிடையே, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராகவானந்தம், குழந்தைகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறிய புகாரையடுத்து, கீழவளவு காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக குழந்தைகள் பார்கவி மற்றும் யுவராஜூக்கு, பெற்ற தாய் ரஞ்சிதா எலி மருந்து கலந்த கேக்கை கொடுத்து கொலை செய்து விட்டு, குழந்தைகள் விளையாடும் போது யாரோ வைத்த எலி பிஸ்கட் கலந்த கேக்கை சாப்பிட்டு விட்டு உயிரிழந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது.
இதனையடுத்து கீழவளவு காவல்துறையினர் தாய் ரஞ்சிதா மற்றும் அவரின் ஆண் நண்பரான அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த கல்யாணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தவறான உறவுமுறைக்காக பெற்றக் குழந்தைகளையே தாய் விஷம் வைத்துக் கொன்றது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.