மதுரையில் மளிகை பொருட்கள் வாங்கச் செல்வது போல நடித்து கஞ்சா பதுக்கி விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தளர்வுகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதனால் முன்பைவிட தற்போது சாலையில் செல்லும் மக்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. அந்த வகையில் சமூகத்தில் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் மதுரை மாவட்டம் பரவை பகுதியில் மளிகை பொருட்கள் வாங்கச் செல்வது போல் நடித்து கட்டை பையில் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பைப் பலப்படுத்திய காவல் துறையினர் மதுரை சமயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை மடக்கிப்பிடித்தனர்.
அதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் செல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா மற்றும் மதுரை காசிநாதன் என்பது தெரிய வந்துள்ளது.அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.1600 பறிமுதல் செய்த மதுரை சமயநல்லூர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்