சென்னையில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த இளைஞர்களை காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்
திருவண்ணாமலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் 20 ஆண்டுகளாக சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை திருவான்மியூர் வால்மீகி கோவில் அருகே நேற்றிரவு நடைபாதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அவ்வழியே ஆட்டோவில் வந்த இருவர் இவரிடம் சிகரெட் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணமூர்த்தி சிகரெட் தர மறுக்கவே ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டனர்.
தலையில் தீப்பற்றிய கிருஷ்ணமூர்த்தி சாலையில் ஓடி தீயை அணைக்க முயற்சித்தார். இதனை நேரில் கண்ட சிலர் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீ வைத்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்துச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் ஆட்டோவின் பதிவெண்ணை கொண்டு திருவான்மியூரை சேர்ந்த விஜயராஜா, மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த உதவி ஆய்வாளர்கள் மகாராஜன், வசந்தராஜ், மற்றும் காவலர்கள் ராஜசேகரன், செந்தில் ஆகியோரை அடையார் துணை ஆணையர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
செய்தி : சாந்தகுமார் (தாம்பரம் செய்தியாளர்)