இரட்டை இருப்பிடச் சான்று தொடர்பாக திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறையின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக கூறியிருந்தார். இதனால் தமிழக மாணவர்கள், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இரட்டை இருப்பிடச் சான்றிதழை சரிபார்க்க சரியான நடைமுறை இல்லாத தமிழக சுகாதார துறையின் அரசாணையை ரத்து செய்யவும், இதுதொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கி வேறு மாநில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து அந்த மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்வது தவறு என நீதிபதி தெரிவித்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் பலர் தங்களது மகன், மகளை புதுச்சேரி மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கும் நோக்கத்தில் காரைக்காலுக்கு இடமாறுதல் பெற்று பின்னர் அங்கு இருப்பிடச் சான்றிதழ் பெற்று கல்லூரியில் சேர்த்துள்ளனர். இதன்பின் அவர்கள் கோழிக்கோட்டிற்கே சென்றுள்ளனர். இது மோசடி என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதனையடுத்து இரட்டை இருப்பிடச் சான்றிதழ் தொடர்பான தமிழக சுகாதாரத்துறையின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தும், தமிழக சுகாதாரத்துறை செயலர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இரட்டை இருப்பிட சான்றிதழ் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பங்கேற்கலாம் என தமிழக அரசின் சுகாதார துறை சமீபத்தில் அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.