ஓணம் திருநாளை ஒட்டி எக்ஸ் வலைத்தளப்பதிவில் பதிவிட்டுள்ள விஜய், மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் என கூறியிருந்தார். இதனை மலையாளத்திலும் குறிப்பிட்டிருந்தார். இந்த வாழ்த்துச் செய்தியை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஒரு மோதல் ஏற்பட்டது.
ஒரு தரப்பினர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்துக் கூறவில்லை என கேள்வி எழுப்பினர். மற்றொரு தரப்பினர் தமிழ்ப்புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூறாதது ஏன் என வினா எழுப்பி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தனர்.
இதற்கு விஜயின் அதரவாளர்கள், தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜயின் வளர்ச்சியை கண்டு அஞ்சுவதாக சாடியிருந்தனர். இதனிடையே, பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவர் விருப்பம் என கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
இது ஒரு புறம் இருக்க, வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நிதியுதவி அளிக்காமல் தற்போது ஏன் கேரள மக்கள் மீது கரிசனம் என ஒரு சிலர் விஜயின் ஓணம் வாழ்த்தை குறிப்பிட்டு கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜயின் ஆதராவளர்கள், வயநாடு நிலச்சரிவின் போது விஜய் மக்கள் மன்றம் சார்பில் செய்த உதவிகளை பட்டியலிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி, தீபஒளித் திருநாள் ஆகிய பண்டிகைகளுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக் கூறுவது இல்லை. அவர்கள் பாணியையே விஜய் தற்போது கையில் எடுத்துள்ளாரா? அதற்கு விஜய் அறிவிக்கும் அவரின் கட்சிக் கொள்கைதான் பதில் சொல்ல வேண்டும்...