செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வருகின்ற 27-ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் 90 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், விக்கிரவாண்டி அருகேயுள்ள பாப்பனப்பட்டு கிராமத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. விஜய்யின் உருவத்துடன் பறக்கவிடப்பட்டுள்ள இந்த பலூன்கள் மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக அமைய பெற்றுள்ளன. இதேபோல தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களை அமைத்துள்ளனர். அதேபோல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை போன்ற வடிவம் மஞ்சள் நிறத்தில் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மாநாட்டு திடல் பகுதியில் பெண்கள், ஆண்கள் மாற்றுத்திறனாளிகள், முதியோர் அமருவதற்கு தனித் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அந்த இடத்தில் 300 மொபைல் டாய்லெட் அமைக்கும் பணியும், 300 குடிநீர் வாட்டர் டேங்க் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேபோன்று 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படும் இடத்தில் புல் தரைகள் மீது கிரின் மேட் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மாநாட்டுத் திடலை பார்ப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 26-ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.