செய்தியாளர் சந்தானகுமார்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாடு பாதுகாப்பு பணிகள் குறித்து பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் பொருளாளர் வழக்கறிஞர் வெங்கடராமன் போன்றோர் துபாயை சேர்ந்த விவிஐபி பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கட்சியின் முதல் மாநாடு என்பதால் பெரிய அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத வகையில் மாநாடு நடைபெற வேண்டும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபட இருந்தாலும் மாநாடு திடலில் மக்களுக்கு எந்த ஒரு சிரமும் ஏற்பட கூடாது என்பதற்காக துபாயை சேர்ந்த விவிஐபி பாதுகாப்பு நிறுவனத்துடன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனம் மிக பெரிய நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களை அழைத்து வந்து இந்த மாநாட்டில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநாடு திடலில் எப்படி அமர வைப்பது, கூட்ட நெரிசல் ஏற்படாமல் எப்படி உணவு வழங்குவது என்பது குறித்தும் மாநாடு திடலுக்கு எப்படி மக்கள் வருவார்கள் செல்வார்கள் என்பது குறித்தும் விரிவான திட்டத்தை இந்த ஆலோசனை கூட்டத்தில் விவிஐபி பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகிகள் வழங்கி உள்ளனர்.
7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை மாநாடு ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபடுத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சி இந்த நிறுவனம் சார்பாக வழங்கப்பட உள்ளது. மாநாடு அன்று பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பணியில் இந்த நிறுவனத்தை சார்ந்த 250திற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாநாடு திடலில் முன்கூட்டியே 20 ஆம்புலன்ஸ்களை தயாராக நிறுத்தி வைக்கவும்,100 மருத்துவர்கள் மற்றும் 200 துணை மருத்துவர்களை பணியில் அமர்தவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் தடை இல்லாமல் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். மாநாடு திடல் மட்டும் இல்லாமல் மாநாடு திடல் அமைந்துள்ள சுற்றுவட்டார 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே தண்ணீர் டேங்க் வைக்கவும் தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.