விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் கடந்த மாதம் 27ஆம் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய போது.... தமிழக மக்கள் நம்மை சிங்கிள் மெஜாரிட்டியோடு ஜெயிக்க வைப்பார்கள் என்ற ஆழமான நம்பிக்கை நமக்கு 100 சதவீதம் இருக்கு. இருந்தாலும், நாம அந்த நிலையை நிறைவா அடைந்தாலும். நம்ம செயல்பாட்டை நம்பி நம்மளோடு சில பேர் வரலாமில்லையா?. அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா?.
அப்படி வர்றவங்களையும் நாம அன்போடு அரவணைக்கணும் இல்லையா? அதனால நம்மள நம்பி நம்மளோட களம்காண வர்றவங்களுக்கும் ஆட்சி அதிகாரத்துல பங்களிப்பு தந்து, அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.
விஜய் அவசரப்பட்டுவிட்டார் - திருமாவளவன்
விஜயின் இந்தப் பேச்சை எதிர்த்துப் பேசிய திருமாவளவன், கூட்டணி ஆட்சி அதிகாரப் பகிர்வு எல்லாம், ரகசியமாக பேச வேண்டியவை. விஜய் அவசரப்பட்டுவிட்டார். நாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றார். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பாக ஆட்சி அதிகாரப் பேச்சு வரவேற்கப்பட்டது. மற்ற திமுக கூட்டணிக் கட்சிகள், பாஜக, நாம் தமிழர் கட்சி என அனைத்துக் கட்சிகளும் விஜயின் பேச்சை விமர்சித்த நிலையில், அதிமுக அமைதி காத்து வருகிறது. அதிமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விஜயை நட்பு சக்தியாகவே பார்ப்பதாக தெரிகிறது.
2026-ல் கூட்டணி ஆட்சிதான் அமையும் - அன்புமணி
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக, 2026 கூட்டணி குறித்து பேசத் துவங்கியுள்ளது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் அதில் பாமக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில், தவெக, அதிமுக. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் சேர்ந்து 2026 தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்..’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது – டிடிவி.தினகரன்
இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி முதல் முதலாக தமிழகத்தில் அமையும் அதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம் பெறும் என்று கூறினார். அப்போது தவெக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், யூகத்திற்கு நான் பதில் கூற முடியாது என்று தெரிவித்தார்.
எது எப்படியோ தவெக தலைவர் விஜய் கொளுத்திப் போட்ட நெருப்பு தமிழக அரசியல் களத்தில் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா? அப்படியே கூட்டணி மாற்றம் ஏற்பட்டாலும் யார் தலைமையில் கூட்டணி அமைப்பது என்ற குழப்பம் நிலவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, விஜய் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அதிமுக தரப்பும் கூட்டணி கதவுகளை திறந்தே வைத்திருக்கிறது. திமுகவை தவெக விமர்சிக்கும் பட்சத்தில் அது தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்றும் நம்புகிறது.