தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் உரையாற்றிய விஜய், ”ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம்.. பவர்ஃபுல்லான தலைமை இல்லாததால் பச்சப்புள்ள கையில பொறுப்பு இருந்ததாம். அதனால், அந்த நாட்டுல இருந்த பெரும் தலைகள் பயத்துல இருந்தாங்களாம். அந்தச் சின்ன பையன், நாட்டுடைய படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ’போர்க்களம் போலாம்’ எனச் சொன்னார்களாம்.
அப்போது அந்தப் பெருந்தலைகள், ’நீ சின்ன பையன்’ என்றெல்லாம் சொன்னார்களாம். எந்தப் பதிலும் சொல்லாமல் போருக்குத் தனியாக தன் படையுடன் சென்ற அந்த பையன், அடுத்து என்ன செய்தான், என்ன நடந்ததென தெரியாதவங்க கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. சங்க இலக்கியத்தில் இதைச் சொல்லியுள்ளார்கள்” என சொன்னார்.
இதைத் தொடர்ந்து, விஜய் சொன்ன இளம்வீரன் யார் என இணையவாசிகள் தேடத் தொடங்கினர். அந்த வகையில், விஜய் சொன்ன அந்த நபர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என தெரிய வந்துள்ளது.
இந்த நெடுஞ்செழியன், சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. அச்சூழலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றுதல் எளிது எனக் கருதிய சோழநாட்டை ஆண்ட இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும், சேரநாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐம்பெரு வேளிருடன்கூடிப் பாண்டிய நாட்டை நோக்கிப் பெரும்படையுடன் வந்தனர். அவ்வாறு வந்த பகைப் படைகளைக் கண்டு அஞ்சாது, வஞ்சினத்துடன் தமது படைக்குத் தலைமை தாங்கி போர்க்களத்திற்குச் சென்ற நெடுஞ்செழியனான அவ்விளைஞன், பகைவர்களை புறமுதுகிட்டோடச் செய்தான். இத்தலையாலங்கானத்துச் செருவென்ற நிகழ்வே, அவன் இயற்பெயரின் முன் சிறப்பு அடையாளப் பெயராக நிலைத்து நிற்கும் பேறுபெற்றது. இவர் போருக்குச் சென்றபோது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.
இந்தக் கதையைத்தான் விஜய் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகிறது. இதன்மூலம் தம்மை, அரசியலில் புதிய வரவாகப் பார்க்கும், ஏளனமாக நினைக்கும் கட்சிகளுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவேதான், அந்தக் கதையை அவர் உணர்த்தியிருக்க வேண்டும் என்கின்றனர், இணையவாசிகள்.