திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனித நேயத் திருநாள் திராவிட மாடல் _70 நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று புகழுரைத்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், ''என்.எல்.சி.க்கு வீடு. நிலம் கொடுத்த மக்களுக்கு நிரந்தரமான வேலையும் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று விவசாய பெருங்குடி மக்களும் நிலம் கொடுத்தவர்களும் சேர்ந்து போராட்ட குழுத்தலைவராக என்னை தேர்வு செய்துள்ள நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தைத் ஜனநாயக ரீதியாக முன்னெடுத்து வருகிறேன். இந்த நிலையில் என்.எல்.சி. நிர்வாகிகள் உயர் அதிகாரிகளுடன் நிலத்தை கையகப்படுத்த வந்த போது கூட்டணி கட்சி தலைவர்களுடன் தமிழ்நாடு முதல்வரை சந்தித்து அந்த மக்களுக்கு வேலையை உறுதி செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை இறுதியில் என்ன தொகை நிர்ணயம் செய்யப்பட்ட உள்ளதோ, அதை வழங்க வேண்டும். 2007-08ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிதியை உயர்த்தி தரவேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நிலத்தை கையகப்படுத்த கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட முதல்வர் சம்பந்தப்பட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டு நில கையக்கப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வீராணம் ஏரி சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் இருப்பதாகவும், அதை எடுப்பதற்கான பூர்வாங்க பணிகளை ஆய்வு செய்வதற்கு டெண்டர் விடுவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. ஆனால் அந்த பணிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என விளக்கினார். மேலும் வீராணம் ஏரியில் நிலக்கரி எடுப்பதால் பாலைவனம் ஆகிவிடும் சூழல் ஏற்படும் என்பதால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுங்கசாவடி வரி உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமது கண்டனத்தை தெரிவித்த அவர் ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ஒரு காலத்திலும் இதை அனுமதிக்க முடியாது என காட்டமாக தெரிவித்தார். 60 கிமீ தொலைவில் உள்ள சுங்கசாவடிகளை அப்புறப்படுத்தவேண்டும், அது வரை என்னுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார். இருக்கின்ற சுங்கசாவடிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் புதிய சுங்கச்சாவடிகளை அமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்கள், மக்களுகாக போராடும் இயக்கங்களின் போராட்டங்களின் வாயிலாக தான் அகற்றப்படவேண்டும். இந்தியாவிலே 33 சதவித சுங்கசாவடிகளில் 55 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் பணத்தை கொள்ளயடிக்கின்ற கூடாரமாக உள்ள சுங்கசாவடிகளை எதிர்த்து எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.