விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி சாலை பகுதியில் 27 விவசாயிகளின் 80 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு 50,000 இருக்கைகளுடன் லட்சத்திற்கும் மேற்பட்டோர் நின்று பார்க்கும் அளவிற்கு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டத்தின் நடுவில் தவெக தலைவர் விஜய் நடந்து சென்று அனைவருக்கும் கைகாட்டி வரவேற்றுவிட்டு அதன்பிறகு பேச மாநாட்டில் உரையாற்ற உள்ளார். மாநாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
மாநாடு ஏற்பாடு பணிகள் குறித்து புதியதலைமுறையிடம் பேசியிருக்கும் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநாடு ஏற்பாட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. காவல்துறை சொல்லும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நாங்கள் கடைபிடித்து வருகிறோம்.
குறிப்பாக கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 150 மருத்துவர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அது மட்டும் இல்லாமல் பாதுகாப்பு பணிக்காக 10,000 ரசிகர் பட்டாளங்கள் பணியாற்ற உள்ளனர்.
இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.