நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலத்தில் மனு அளித்துள்ளார், அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த். மாநாட்டுத் தேதியை எங்கள் தலைவர் அறிவிப்பார் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மதுரை, திருச்சி, சேலம் என தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டு, இறுதியாக விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக விஜய்யின் முதல் நகர்வும் விக்கிரவாண்டியில்தான் பெரியளவில் முன்னெடுக்கப்பட்டது. தற்போது மாநாடும் விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது. விக்கிரவாண்டி ஏன் விஜய்க்குப் ஸ்பெஷல்?
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கொடியின் விளக்கம், கட்சியின் கொள்கைகள், நிர்வாகிகள் யார் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
மாநாடு செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியானது. மாநாட்டுக்கு பல மாநில முதல்வர்கள் தொடங்கி பல முக்கிய வி.ஐ.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது. தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள், எம்.பி, எம்.எல்,ஏக்கள் மாநாட்டிலேயே கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மாநாடு முதலில் மதுரையில் நடைபெறுவதாகச் சொல்லப்பட்டது. பிறகு, சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின. பின்னர், திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஜி கார்னர் ரயில்வே திடலில் மாநாடு நடத்துவதற்கு மனு அளித்து மறுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்தநிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில், ஏடிஎஸ்பி திருமாலிடம், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விக்கிரவாண்டி வி சாலையில் உள்ள 150 ஏக்கரில் மாநாடு நடத்த அனுமதியளிக்கவேண்டும் என மனு அளித்துள்ளார். அவருடன் மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர். இந்தநிலையில், மற்ற பெரிய ஊர்களை விடுத்து விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்..,
“விக்கிரவாண்டியில் எங்கள் தளபதிக்கு ரசிகர்கள் அதிகம். எங்கள் கட்சிக்கும் நல்ல கட்டமைப்பும் இருக்கிறது. உங்களுக்கு நன்றாகத் தெரியும். விஜய் மக்கள் இயக்கம் சார்பாகத், விலையில்லா விருந்தகம், விலையில்லா மருந்தகம், நடிகர் விஜய் பயிலகம் என பல நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறோம்.
ஆனால், அரசியல் ரீதியான முதல் நகர்வு என்பது, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்ய தளபதி உத்தரவிட்டதுதான். அப்போது, விக்கிரவாண்டியில்தான், எங்கள் பொதுச் செயலாளர் அரசியல் கட்சிகளைப்போல் பிரம்மாண்ட வாகனப் பேரணி சென்று மாலை அணிவித்தார். அந்தவகையில், எங்களுடைய முதல் அரசியல் நகர்வு தொடங்கியதே விக்கிரவாண்டியில்தான் எனச் சொல்லலாம்.
அது மட்டுமல்ல, விக்கிரவாண்டியில் இருந்து பாண்டிச்சேரி மிகவும் பக்கம். எங்கள் பொதுச் செயலாளருக்கும் மாநாட்டு வேலைகளைக் கவனிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும். அந்தவகையில், சென்டிமெண்டாகவும் செயல்பாடுகளுக்கு ஏற்ற ஊராகவும் விக்கிரவாண்டியே இருக்கிறது. அதனால்,எங்கள் நிர்வாகிகள் உற்சாகமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.