தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியின் புதிய காவல் கண்காணிப்பாளராக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர வட சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சண்முக ப்ரியா, நீலகரி மாவட்ட காவல் கண்காணிப்பளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தை சரியாக கையாளாத காரணத்திற்காக வெங்கடேஷ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியராக, தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் துணை தலைவர் ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.