‘சாப்பாடு, நெட், ஏடிஎம் இல்ல’ - தூத்துக்குடி அனுபவத்தை கொட்டித்தீர்த்த ரிப்போர்ட்டர்ஸ்!

‘சாப்பாடு, நெட், ஏடிஎம் இல்ல’ - தூத்துக்குடி அனுபவத்தை கொட்டித்தீர்த்த ரிப்போர்ட்டர்ஸ்!
‘சாப்பாடு, நெட், ஏடிஎம் இல்ல’ - தூத்துக்குடி அனுபவத்தை கொட்டித்தீர்த்த ரிப்போர்ட்டர்ஸ்!
Published on

தூத்துக்குடியில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் தரப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட தேசிய தலைவர்களும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். 

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அடுத்த நாளே தேசிய ஊடகங்கள் உட்பட அனைத்தும் தூத்துக்குடியில் குவிந்தன. அன்றைய தினமும் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பதட்டம் நிலவியது. செய்திகளைச் சேகரிக்க சென்னை உட்பட பல பகுதிகளில் இருந்தும் செய்தியாளர்கள் தூத்துக்குடிக்கு படையெடுத்தனர். தூத்துக்குடியில் ஏற்கனவே நிலைமை மோசமடைந்திருக்க, முதல்முறை தூத்துக்குடி சென்ற செய்தியாளர்களுக்கு இது சற்று கடினமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அன்றைய தினம் மாலையே அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. காஷ்மீர் போல தூத்துக்குடி காட்சியளித்ததால், கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. தெருக்கள் நெடுக ரத்தக்கறைகளுடன் நெருப்புகள், கட்டைகள், கற்கள் மட்டும் கிடக்க, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கிடையே சிக்கித்தவித்து வரும் செய்தியாளர்கள் தரும் தகவல்கள் என்ன? சிலரின் அனுபவங்களை கேட்பதற்காக, புதிய தலைமுறை இணையதளம் சார்பாக பேசினோம். 

தனது அனுபவத்தை கூறிய தி நியூஸ் மினிட் செய்தியாளர் மானஷா, “நாங்க இணையதள ஊடகம். எனவே வீடியோ எல்லாம் சமூக வலைத்தளங்கள்ல தான், நேரடி ஒளிபரப்பு செய்வோம். நெட் கட் பண்ணதால, நாங்க வீடியோ லைவ் பண்ண முடியல. நியூஸ்லாம் உடனே நெட்ல அனுப்ப முடியல. செய்தி எல்லாம் போன் மெசேஜ்கள் மூலம் அனுப்பினோம். தூத்துக்குடியில மட்டும் நெட் கட் பண்ணிருந்தா, நெல்லை இல்லனா கன்னியாகுமரிக்கு போய், வீடியோவை அனுப்பிருப்போம். ஆனா அங்கயும் நெட் கட் பண்ணிட்டாங்க. தூத்துக்குடி போனதும், முதல் நாள் ஒரு ஓட்டல்ல தங்கினோம். முதல் நாள் சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கிடைச்சுது. அடுத்தடுத்த நாள்ல காய்கறி வரத்துலாம் குறைஞ்சு போச்சு. உணவுக் கடைகள்கூட குறைஞ்சு போச்சு. தண்ணி மட்டுமே குடிச்சோம். கோபத்துல இருந்தாலும், போராட்டக்காரங்க மற்றும் மக்கள் எங்களுக்கான தகவலை கொடுத்தாங்க” என்று தெரிவித்தார்.

மிரர் நவ் செய்தியாளர் ப்ரமோத் கூறும்போது, “நாங்க தூத்துக்குடி போனதும், எங்களுக்கு எந்த வண்டியுமே கிடைக்கல. 23ஆம் தேதி தூத்துக்குடி போனோம். அன்னிக்கு நைட் அங்க கரண்ட் கட் பண்ணிடாங்க. ஏடிஎம் எதுலயும் பணம் இல்ல. சாப்புடுறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. களத்துக்கு போனப்ப, ஜல்லிக்கட்டு போராட்டத்தப்ப நடந்த வன்முறை கண்ணு முன்னாடி வந்துபோச்சு. நியூஸ் வீடியோலாம் அனுப்ப அருப்புக்கோட்டைக்கு போனோம். அங்க போறதுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். அங்க போகும் போது அங்கயே சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிட முடிஞ்சுது” என்றார். 

ரிபப்ளிக் டிவியின் செய்தியாளர் சஞ்சீவ் கூறும் போது, “தூத்துக்குடியில துப்பாக்கிச் சூடு அவசரமா அங்க நியூஸ் சேகரிக்க போனோம். போன அப்புறம் தான், நெட் கட்னு சொன்னாங்க. அவசரத்துல பணம் எதுவும் எடுத்துட்டு போல. எங்கேயுமே ஏடிஎம் இல்ல. நெட் கட் பண்ணதும் ஏடிஏம் எதுவும் வொர்க் ஆகல. ஓட்டலே இல்ல. ஸ்நாக்ஸ் கூட கிடைக்கல. சாப்புடுறதுக்கு, சாத்தூர் போனோம். களத்துல இருக்குறப்போ பிஸ்கட் மட்டும் தான் சாப்பிட்டோம். ஓட்டல்லயும் கார்டு வாங்க மாட்டோம் சொல்லிட்டாங்க. களத்துக்கு போனப்ப, போலீஸ்காரங்க, ஏன்? எங்களுக்கு எதிராக செய்தி போடுறீங்கனு கேட்டாங்க. கீழ்மட்ட அதிகாரிகள்லாம், நாங்களும் இந்த ஊருதான். எங்களுக்கும்தான் ஸ்டெர்லைட் இருக்குறது பிடிக்கல. இருந்தாலும் மக்கள் இப்படினு போராடுனா நாங்க என்ன செய்யமுடியும். எங்களுக்கு எதிராவே செய்தி போடாதீங்கனு சொன்னாங்க. மக்கள் மீடியா மேல கோவத்துல இருந்தாங்க. ஏன்? வந்தீங்க. இத்தன நாளா வரல. சுட்டுக்கொன்னதும் தான் வருவீங்களானு கேட்டாங்க. ஆனால் எல்லா ஊடகமும் ஆரம்பத்துல இருந்து நியூஸ் போடுறோம்னு சொன்னாலும், அவங்க கோவத்துலதான் இருந்தாங்க” என்கிறார். 

நாம் பேசிய வரை கள நிலவரம் அளவுக்கு அதிகமா களேபரமாகதான் இருக்கிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com