தூத்துக்குடியில் தனது மகன் குண்டடிபட்டுள்ள நிலையிலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஒரு தாய் கூறியுள்ளார்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நேற்று முன்தினம் தடையையும் மீறி ஏராளமான போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த அரசு வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால் போராட்டக்காரர்களை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து அன்று மாலையே, எஸ்பி வீட்டை முற்றுகையிட பெண்கள் உள்ளிட்ட பலர் சென்றனர். அப்போது அவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
காவலர்கள் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டு, அப்பகுதியில் வசிக்கும் ஜேசு ஆனந்த என்ற இளைஞர் தனது வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது தன் அன்னை வயதில் இருந்த ஜான்சி என்ற பெண்ணை காவலர்கள் சுட்டுள்ளனர். இதைப்பார்த்ததும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணை காப்பாற்ற பாய்ந்தார் ஜேசு. இதில் ஜேசுவின் தொடை மற்றும் கழுத்துப்பகுதியில் குண்டு பாய்ந்தது. ரத்தம் வடிய அவர் நிமிர்ந்து பார்த்தபோது, ஜான்சியின் தலையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்துள்ளார். இதனால் அங்கேயே கண்கலங்கி மயங்கிப்போனார் ஜேசு.
இதையடுத்து குண்டடி பட்டவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜேசு, தனது ஆதங்கத்தை புதிய தலைமுறையிடம் கூறினார். தான் அந்தப் பெண்ணை காப்பற்றச் சென்று குண்டடி பட்டதை விட, அவர் இறந்துவிட்டார் என்பதே அதிக வருத்தம் தருவதாக பெருந்தன்மையுடன் தெரிவித்தார். அதற்கும் மேலாக அவரின் தாய் கூறும் போது, ‘என் மகனுக்கு குண்டடி பட்டுவிட்டது. ஆனால் அவனைப் போல நிறைய இளைஞர்களுக்கு குண்டடிபட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், தன் மகன் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் அந்தத் தாய், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வு காண்போரை உருகச்செய்தது.