தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவுக்கு உட்பட்ட வில்லிசேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (34). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம் (32). இந்தத் தம்பதியருக்கு கீர்த்திகா (11) மனோசித்ரா (9) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015 ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி அன்று குடும்ப செலவுக்காக கற்பகத்தின் தாய் வீட்டில் இருந்து ரூபாய் 50,000 வாங்கி வரவேண்டும் எனக் கேட்டு தங்கப்பாண்டி தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து தாய் வீட்டுக்கு சென்ற கற்பகம், சில நாட்களுக்குப் பின் மீண்டும் வில்லிசேரி வந்துள்ளார். அப்போது, "பணம் கொண்டு வராமல் ஏன் இங்கு வந்தாய்" எனக் கேட்டு தங்கப் பாண்டிக்கும் கற்பகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி மனைவி என்றும் பாராமல் கற்பகத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், தங்கப்பாண்டி, தனது சகோதரியின் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்காக மனைவி கற்பகத்திடம் பணம் கேட்டு தகராறு செய்தார். ஆகவே ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்தார் என்பது தெரியவந்தது.
இந்தக் கொலைக்கு தங்கபாண்டியன் சகோதரர் தங்க மாரிமுத்து(40), சகோதரிகள் லதா செல்வி(34), சுப்புலட்சுமி(49), சுப்புலட்சுமியின் மகன் சரவணக்குமார்(26) ஆகியோர் சேர்ந்து கூட்டுசதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தங்கப்பாண்டியன், தங்கமாரிமுத்து, லதா செல்வி, சுப்புலட்சுமி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவணக்குமார் தப்பியோடி விட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன் இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தங்க பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் ஆயுள் தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் சுபாஷினி ஆஜராகி வாதாடினார்.