வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 516 பேர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று பேசுகையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு நாளை மாலை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு செய்யப்பட்டுள்ளதால் ஐந்து பேருக்கு அதிகமான மக்கள் கூடக் கூடாது என்றார். மேலும், கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து வந்த 516 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது என்றும் விளக்கம் அளித்தார்.
மேற்கொண்டு கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம் அரசு பொது மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட வார்டு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அத்துடன், கொரோனா நோய் தொற்றைத் தடுக்க பயன்படுத்தும் முகக்கவசம் மற்றும் கைகளைச் சுத்தம் செய்யும் திரவம் போன்றவை தட்டுப்பாடு ஏற்படாமல் மகளிர் சுய குழு மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அவை பேரூராட்சி நகராட்சிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.